சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு; சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி
புதுடில்லி: தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 50 சதவீத, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மருத்துவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 2020ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு மனு தாக்கல் செய்தது.
அனுமதி
இதையடுத்து, தமிழக அரசு உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கடந்த 2021 - 22ம் ஆண்டு சேர்க்கையின் போது, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அப்போது, இடைக்கால தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், 2021 - 22ம் ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்தது.
உத்தரவு
தற்போது 2022 - 23ம் ஆண்டு சேர்க்கையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
அப்போது, வழக்கு விசாரணை முடியும் வரை தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 50 சதவீத, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கையை, 15 நாட்களில் நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன் பிறகும் நிரப்பப்படாத இடங்கள் இருந்தால், அதை மத்திய அரசுக்கு அளிக்கவும் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment