பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் | Separate Directorate for Schools - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 17, 2022

பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் | Separate Directorate for Schools

நர்சரி, சி.பி.எஸ்.இ., மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம்



தமிழக பள்ளிக் கல்வி துறை நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கும், தனி இயக்குனரகம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணை:

அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே மாவட்ட கல்வி அலுவலர் இருப்பதால், தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவற்றை ஆய்வு செய்ய, உரிய நேரமில்லை. இதனால், கல்வி கற்பித்தல் முறையை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்களுக்கும் அதிக வேலைப்பளு உள்ளது. அவர்களாலும் தொடக்க கல்வி மாவட்ட நிர்வாகங்களை கண்காணிக்க முடியவில்லை.கொரோனா தொற்றுக்கு பின், அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 இதை தக்கவைக்க தரமான கல்வி அவசியம். எனவே, தொடக்க கல்விக்கு தனி டி.இ.ஓ., நியமிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார்.மாநிலம் முழுதும், 5,159 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் உட்பட, 42 ஆயிரத்து 500 பள்ளிகள் தொடக்க கல்வியின் கீழ் செயல்படுகின்றன. இவற்றின் நிர்வாகத்தை மேற்கொள்ள, தற்போதுள்ள 836 வட்டார கல்வி அதிகாரிகளான, பி.இ.ஓ.,க்களுடன் கூடுதலாக 15 பி.இ.ஓ., மற்றும் 279 உருது பள்ளி நிர்வாகத்துக்கு தனியாக ஆறு பி.இ.ஓ., நியமிக்க, கமிஷனரகம் கடிதம் எழுதியுள்ளது.

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ், 8,200 சுயநிதி பள்ளிகள் செயல்படுகின்றன. இவை அனைத்தும், தனியார் பள்ளி இயக்குனரகம் உருவாக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தில் சேர்க்கப்பட உள்ளன.l மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு, தலா ஒரு கூடுதல் இணை இயக்குனர் பதவி மற்றும் தலா ஒரு துணை இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

 சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகத்தில் இருந்து, இரண்டு இணை இயக்குனர் பணியிடங்கள், தொடக்க கல்வி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி.,க்கு மாற்றப்படுகின்றனl 32 மாவட்ட கல்வி அலுவலர், 15 வட்டார கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான, 16 நேர்முக உதவியாளர், 86 கண்காணிப்பாளர்கள் பதவிகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 

 மொத்தம், 152 டி.இ.ஓ.,க்களில், தொடக்க கல்விக்கு மட்டும், 58 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்l புதிதாக நேரடி நியமனம் பெற்ற, டி.இ.ஓ.,க்கள், தொடக்க கல்வி டி.இ.ஓ.க்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள், இரண்டு ஆண்டுகள் இந்த பணிகளை கவனிப்பர், பின், இடைநிலை கல்விக்கு மாற்றப்படுவர்l தொடக்க கல்வி டி.இ.ஓ.,க்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகள்; இடைநிலை கல்வி டி.இ.ஓ.,க்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்களை கவனிப்பர். ஆசிரியர், பணியாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்குவர். 

ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகத்தை மட்டும், சென்னை சி.இ.ஓ., மற்றும் சென்னை மாவட்ட தொடக்க கல்வி டி.இ.ஓ., கவனிப்பர்l தனியார் பள்ளி டி.இ.ஓ.,க்கள், அனைத்து சுயநிதி, பிளே ஸ்கூல்கள், நர்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம், மாணவர்களிடம் கட்டண வசூல் குறித்த கண்காணிப்பு, அடிப்படை கட்டமைப்பு குறித்த சான்றிதழ் ஆய்வுகளை கவனிப்பர்.

 மாவட்ட சி.இ.ஓ.,க்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நிர்வாகங்களை கண்காணிப்பர். அரசு உதவி பெறும் பள்ளிகளின் உயர், மேல்நிலை ஆசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்குவர். ஆசிரியர், பணியாளர்களின் நியமனம் மற்றும் மாவட்ட அளவில் இடமாறுதல் வழங்குவர். புதிய பதவிகளுக்கான நிர்வாக செலவை ஈடுகட்ட, பள்ளிக் கல்வி கமிஷனரகத்தில் இருந்து, 31 பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை ஆய்வாளர்; 30 கூடுதல் சி.இ.ஓ.,க்கள்; 31 இளநிலை உதவியாளர் மற்றும் 86 கண்காணிப்பாளர் பதவிக்கான இடங்கள், அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment