'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் மிகப்பெரிய வெற்றி: வெளிநாட்டு ஆய்வாளர்கள் பாராட்டு!
Illam thedi kalvi scheme:
குறிப்பாக 2019ல் குறைந்த கற்றல் திறன் கொண்டிருந்த மாணவர்களும்,விளிம்பு நிலையில் இருந்த மாணவர்களும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் கற்றல் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.இல்லம் தேடி கல்வி திட்டத்தால் கற்றல் இடைவெளி பெரிதும் குறைக்கப்பட்டுதாகவும், மிக துடிப்பான இந்த திட்டத்தை நாட்டின் ஏனைய மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பன்னாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாநிலத்தின் கிட்டத்தட்ட 92 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் உள்ள 34,05,856 அரசுப்பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கற்றல் திறன்களைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் பேராசிரியர் கார்த்திக் முரளிதரன், ஸ்டார்க்கோம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் பேராசிரியர் அபிஜீத் சிங், லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Mauricio Romero ஆகியோர் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை வெளியிட்டுள்ளனர்.
COVID-19 Learning Loss and Recovery: Panel Data Evidence from India என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வில் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலம், கொரோனா தொற்று பொது முடக்கம், கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலம் என்ற மூன்று கால இடைவெளியுடன் கற்றல் அடைவினை ஒப்பிட்டு மாணவர்களின் கற்றல் நிலையினை ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 19,000 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கற்றல் மதிப்பீட்டில் நான்கு முக்கிய முன்னேற்றங்கள் தென்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலாவதாக, கொரோனா தொற்று பொது முடக்கத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் மிகப் பெரிய கற்றல் இழப்புகள் ஏற்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டு அடிப்படையிலான கற்றல் அளவுகளுடன் ஒப்பிடுகையில், 2021 டிசம்பர் மாதத்தில் ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களில் மாணவர்களின் கல்வி திறன்கள் குறைந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட 1 முதல் 2 ஆண்டு வரையிலான கற்றல் இழப்புகள் ஏற்படுத்தியதாகவும், ஒரே வகுப்பில் உள்ள வயதி முதிய மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அரசுப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்த தொடங்கிய ஆறே மாதங்களில் (கிட்டத்தட்ட மே மாதத்தில்) கற்றல் இழப்புகள் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானித்துள்ளனர்.
இதற்கு, மிக முக்கிய காரணமாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இத்திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு அதிகளவு காணப்படுவதாகவும், கற்றலில் முன்னேற இந்த வாய்ப்பை மாணவர்கள் தவமைத்துக் கொண்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக 2019ல் குறைந்த கற்றல் திறன் கொண்டிருந்த மாணவர்களும்,விளிம்பு நிலையில் இருந்த மாணவர்களும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் கற்றல் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
கற்றல் இழப்புகள்/இடைவெளி பின்னோக்கி (Regressive) செல்லும் தன்மையுடையதாக சொல்லும் ஆய்வாளர்கள், இதனால் விளிம்புநிலையில் உள்ள ஓரங்கப்பட்ட மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியதாக தெரிவிக்கின்றனர். அதே சமயம், இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் பெறப்பட்ட கற்றல் மீட்பு ஆரோக்கியமானதாக முன்னோக்கிச் செல்லும் தன்மையுடையதாக (Progressive) செயல்பட்டுள்ளது .
அதாவது, இல்லம் தேடி கல்வித் திட்டம் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு கூடுதல் பலன்களை அளிக்கும் செயல்திட்டமாக இருந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment