கவனமுடன் படித்தால் நீட் தேர்வில் வெற்றி எளிது!'
தீவிர கவனத்துடன் படித்தல், நீட் தேர்வில் வெற்றி பெறலாம்; முயற்சியும் பயிற்சியும் இருந்தால் போதும், என, நீட் தேர்வில் தமிழகத்தில் மாணவியர் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி ஹரிணி தெரிவித்தார்.
கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள, சுகுணா பிப் பள்ளியில் படித்த மாணவி ஹரிணி, அகில இந்திய அளவில் 43வது இடத்தையும், தமிழகத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். மாணவியர் பிரிவில் தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் சுகுணா, சுகுணா குழுமத்தின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, முதல்வர் புவண்ணன் ஆகியோர் மாணவி ஹரிணியை பாராட்டி பரிசளித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவி ஹரிணி கூறியதாவது:
நீட் தேர்வில் 702 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும், அகில இந்திய அளவில் 43வது இடத்தையும் பெற்றுள்ளேன். தேர்வில் வெற்றி பெற சுகுணா பள்ளியும், ஆசிரியர்களும், பெற்றோரும் முக்கிய காரணம்.
எனது பெற்றோர்கள் இருவருமே மருத்துவர்கள் என்பதால், இயல்பாகவே எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
நீட் தேர்வில் மதிப்பெண் பெற, கோச்சிங் சென்டர் செல்லவில்லை. தீவிர கவனத்துடன் படித்தால், அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற முடியும்.
முயற்சியும் பயிற்சியும் இருந்தால், வெற்றி பெறுவது நிச்சயம். டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புகிறேன். நரம்பியல் துறையில் ஆர்வம் உள்ளதால், சிறப்பு பாடமாக படிக்க விருப்பம் கொண்டுள்ளேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, அவரது தந்தை முத்துக்குமார் உடனிருந்தார்.
No comments:
Post a Comment