இன்ஜி., கவுன்சிலிங்: 12 ஆயிரம் பேருக்கு சீட்!
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் முதல் சுற்றில், 12 ஆயிரத்து 586 பேருக்கு, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, இன்று மாலை 5:00 மணிக்குள், &'ஆன்லைனில்&' உறுதி செய்ய வேண்டும்.
உறுதி செய்யாவிட்டால், ஒதுக்கிய இடம் கிடைக்காது; மீண்டும் கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் முடியாதுl ஒதுக்கீட்டை ஏற்று கொள்ளலாம் அல்லது தாங்கள் ஏற்கனவே பதிவிட்டதில், முன்னிலை இடம் காலியானால், அதை ஒதுக்குமாறு குறிப்பிடலாம்.
ஒதுக்கிய இடம் வேண்டாம் என்றால், அடுத்த சுற்றில் பங்கேற்குமாறு கூறலாம்.
அதுவும் இல்லாவிட்டால் கவுன்சிலிங்கில் இருந்து வெளியேறுவதாக தெரிவிக்கலாம். ஒதுக்கிய இடத்தை ஏற்று கொண்டவர்களுக்கு, இறுதி ஒதுக்கீட்டு ஆணையும்; முன்னிலை இடங்களை கேட்டவர்களுக்கு, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையும், நாளை வழங்கப்படும்.
இதில், இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள், 22ம் தேதிக்குள் கல்லுாரிக்கு சென்று, கல்வி கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு வாரத்தில் அட்மிஷன்
முன்னிலை இடங்களுக்கு காத்திருப்போர், தாங்கள் தேர்வு செய்த டி.எப்.சி., என்ற கவுன்சிலிங் உதவி மையத்துக்கு சென்று, 22ம் தேதிக்குள், சான்றிதழ்களை சமர்ப்பித்து, முதலில் கிடைத்துள்ள கல்லுாரியின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இந்த ஒரு வார அவகாசத்தில் சேர்க்கையை உறுதி செய்யாதவர்களுக்கு, ஒதுக்கப்பட்ட இடம் ரத்தாகிவிடும்.
எனவே, இறுதி ஒதுக்கீடு பெற்ற அனைவரும், தங்கள் கல்லுாரிகளுக்கு சென்று, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வெளியேற்றம்
இன்ஜினியரிங் முதல் சுற்று கவுன்சிலிங்கில், பொது பாடப் பிரிவில், 14 ஆயிரத்து, 524 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில், 2,230 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை; 12 ஆயிரத்து, 294 பேர் மட்டும் விருப்ப பதிவுகள் செய்தனர்.
இவர்களில் தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கல்லுாரிகளை தேர்வு செய்யாமல் அல்லது கேட்ட இடம் இல்லாமல், 704 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்; 11 ஆயிரத்து, 590 பேர் மட்டும் தற்காலிக ஒதுக்கீடு பெற்றனர்.
தொழிற்கல்விக்கு ஒரே சுற்று மட்டும் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில், 1,879 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அவர்களில், 747 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை; 1,132 பேர் இடங்களை பதிவு செய்தனர்.அவர்களில், 136 பேருக்கு பதிவு செய்த இடங்கள் இன்றி வெளியேற்றப்பட்டுள்ளனர். 996 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். மொத்தமாக, பொது மற்றும் தொழிற்கல்வி பிரிவில் மொத்தம், 12 ஆயிரத்து, 586 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
சாய்ஸ்பதிவு
மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்த விருப்ப பதிவில், எத்தனை கல்லுாரிகள், பாடப்பிரிவுகளை வேண்டுமானாலும் குறிப்பிடலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் சுற்றில், அதிகபட்சமாக ஒரு மாணவர், 557 இடங்களை பட்டியலில் பதிவு செய்து, ஒதுக்கீடு பெற்றுள்ளார். இவர் தரவரிசையில், 12 ஆயிரமாவது இடம் பெற்றவர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இரட்டை ஒதுக்கீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பொது பாடப்பிரிவு மற்றும் தொழிற்கல்வியில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில், ஒரே நேரத்தில் இரண்டு இடங்கள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்கள் தங்களுக்கான இரண்டு ஒதுக்கீட்டில், எந்த கல்லுாரி இடத்தில் சேர பிடித்துள்ளதோ, அதை மட்டும் உறுதி செய்து, ஒரு வாரத்திற்குள் சேர வேண்டும்.
அதாவது, 7.5 சதவீத ஒதுக்கீட்டை தேர்வு செய்தால், அரசு மற்றும் தனியார் என, எந்த கல்லுாரியானாலும், மாணவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டாம். ஆனால், வரும், 22ம் தேதிக்குள், கல்லுாரி அல்லது டி.எப்.சி., மையத்துக்கு சென்று, சான்றிதழ்களை சமர்ப்பித்து, சேர்க்கையை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.
No comments:
Post a Comment