கல்லூரி மாணவிகள் கைவண்ணத்தில் மிளிரும் பிளாஸ்டிக் பாட்டில் வீடுகள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 14, 2022

கல்லூரி மாணவிகள் கைவண்ணத்தில் மிளிரும் பிளாஸ்டிக் பாட்டில் வீடுகள்

கல்லூரி மாணவிகள் கைவண்ணத்தில் மிளிரும் பிளாஸ்டிக் பாட்டில் வீடுகள் 

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அடுத்த ஷர்னாப்பூரில் வசிக்கும் நமீதா, கல்யாணி ஆகிய இருவரின் கைவண்ணத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் வீடுகள் நேர்த்தியான வடிவமைப்புடன் மிளிர்கின்றன. இருவரும் அங்குள்ள அரசு நுண் கலை கல்லூரியில் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் கல்லூரி மூடப்பட்ட சமயத்தில் வீட்டில் முடங்கி இருந்தவர்கள், இணையத்தில் தங்கள் படிப்பு சார்ந்த கலை படைப்புகளை தேடி இருக்கிறார்கள். அப்போது கவுகாத்தியைச் சேர்ந்த மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி உருவாக்கிய கலைப்படைப்பு அவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

தாங்களும் அதுபோல் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு கலை படைப்புகளை உருவாக்குவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். அவை வெறும் காட்சி பொருளாக அமைந்துவிடாமல் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். நீண்ட யோசனைக்கு பிறகு குப்பையிலும், தெருக்களிலும் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வீடு கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். வீடு கட்டுவதற்கு நிறைய பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேவைப்பட்டது. அதற்காக, கிராமத்தில் குப்பை அள்ளுபவர்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் இருந்து பாட்டில்களை சேகரித்திருக்கிறார்கள். 

மேலும் உறவினர்கள், நண்பர்கள், உள்ளூர் கடைக்காரர்களை நாடி இருக்கிறார்கள். தங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் தேவை என்பதை நோட்டீசாக அச்சடித்து பொது இடங்களில் ஒட்டியும், மற்றவர்களுக்கு வழங்கியும் இருக்கிறார்கள். அதற்கு உடனடி பலன் கிடைத்திருக்கிறது. பலரும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்து குவித்துவிட்டார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ளடங்கி இருக்கும் காற்றை நீக்குவதற்கு ஏதுவாக அதற்குள் பிளாஸ்டிக் பைகளை நுழைத்து, வித்தியாசமான பிளாஸ்டிக் செங்கல்களை தயாரித் திருக்கிறார்கள். மண், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மூங்கில் ஆகியவற்றை பயன்படுத்தியும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கற்களை உருவாக்கினார்கள். 

அத்தகைய செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக கலைநயத்துடன் அடுக்கி, அவற்றுக்கு இடையே மண், சாணம் உள்ளிட்ட கலவைகளை கலந்து சுவர் எழுப்பி இருக்கிறார்கள். வீட்டின் மேற்கூரையை மூங்கில் மற்றும் மரத்துண்டு களை கொண்டு கட்டமைத்திருக்கிறார்கள். மூங்கி லால் ஆன கூரையையும் கலை நயத்துடன் கட்டமைத்திருக்கிறார்கள். வீட்டின் கதவுகளும், ஜன்னல்களும் மர துண்டுகளால் வடிவமைக்கப்பட்டவை. சுமார் 4 ஆயிரம் சதுர அடியில் இந்த வீடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சுமார் 16 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோல் 15 டன் பிளாஸ்டிக் பைகளும் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. 

``இன்று, பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கவலை தரும் விஷயங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி பயனுள்ள கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியமானது என்கிறார்கள்'', இந்த கல்லூரி மாணவிகள்.

No comments:

Post a Comment